உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட சில நகரங்களில், தற்காலிக போர் நிறுத்தம் என ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனின் கீவ், கார்க்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறவும், மனிதநேய நடவடிக்கைகளுக்காகவும் அப்பகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் ரஷ்ய ராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
உக்ரைனில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் கட்டடங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
ரஷ்யாவின் தாக்குதலுக்குள்ளான கார்க்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதற்காக அங்குள்ள ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர்.
சைட்டோமிர் மண்டலத்தின் ஓவ்ருச் என்னுமிடத்தில் ரஷ்ய ராணுவத்தினர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் 30 வீடுகள் சேதமடைந்தன. இவற்றில் 5 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின.
உக்ரைன் படையில் இணைந்து போரிடுவதற்காக பிரிட்டனில் இருந்து முன்னாள் ராணுவத்தினர் பலர் வந்துள்ளதாகத் தகவலும் காட்சியும் வெளியாகியுள்ளன.
லுகான்ஸ்கில் எண்ணெய்ச் சேமிப்புக் கிடங்கின் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசித் தாக்கியதில் அது கரும்புகை மூட்டத்துடன் தீப்பற்றி எரிந்தது.
ரஷ்ய ஆதரவாளர்களிடம் உள்ள டொனட்ஸ்க் நகரின் மீது அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டும் மக்கள் பாதி எரிந்த நிலையில் உள்ள ஏவுகணைகளைச் சேகரித்து வைத்துள்ளனர
கீவ் நகரைக் கைப்பற்றும் நோக்குடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான ரஷ்யப் படையினர் குவிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. செச்சன்ய பிரிவினைவாதிகளை அடக்கி ஒடுக்கிய ராணுவப் பிரிவுகள் கதிரோவ் தலைமையில் குரோஸ்னியில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மரியுபோல் நகரை முற்றுகையிட்டுள்ள ரஷ்யப் படையினர் அதன் புறநகர்ப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
ரஷ்ய ராணுவத்திடம் இருந்து நாட்டைக் காப்பதற்காக உக்ரைன் ராணுவத்தின் வீராங்கனைகள் துப்பாக்கி ஏந்தி ஏந்திப் பணியாற்றி வருகின்றனர்.
உலக நாடுகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்துக் கீவ், கார்க்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நான்கு நகரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணி முதல் ரஷ்ய ராணுவம் தற்காலிகப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
முற்றுகையில் உள்ள நகரங்களில் இருந்து பொதுமக்களும் வெளிநாட்டவரும் வெளியேறுவதற்கும், அங்குள்ள மக்களுக்கு உணவுப்பொருட்கள், மருந்துகள் வழங்கவும் மனிதநேய அடிப்படையில் போர் நிறுத்தம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை அழைத்துச் செல்வதற்காகக் கிழக்குத் துறைமுக நகரான மரியுபோலில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Comments