உக்ரைனில் இருந்து இதுவரை 16 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு.!
ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்பட 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். சுமி எல்லையில் சிக்கியுள்ள 700 மாணவர்களை மீட்கும் பணியை தூதரக அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து அங்கு சிக்கி இருக்கும் இந்தியர்கள் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், ருமேனியா, ஹங்கேரி, போலந்து நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணியில் விமானப் படையின் சி17 ரக விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து 76 விமானங்கள் இயக்கப்பட்டு 15 ஆயிரத்து 920 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் புடாபெஸ்டில் இருந்து 160 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது.
உக்ரைன் நாட்டின் சுமி எல்லையில் சிக்கியுள்ள 700 இந்தியர்களை மீட்கும் முயற்சியை தூதரக அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். கீவ்வில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுமி எல்லையில் ரஷ்யப் படைகள் தொடர் குண்டு மழை பொழிந்து வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன.
குடிநீர் தட்டுப்பாடால் பனி உருகி வரும் நீரை குடிப்பதாகவும், மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் தன்னிச்சையாக வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், மீட்பு நடவடிக்கை எடுக்கும் வரை அங்கேயே காத்திருக்குமாறு தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதேநேரம் சுமி எல்லையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4 பேருந்துகள் பொல்டவா விரைந்துள்ளதாகவும், விரைவில் அங்கு சிக்கி இருக்கும் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Comments