மாயமான சிறுமி மரணம்.. இளைஞன் உட்பட 8 பேர் கைது

0 4826

மதுரை மேலூர் அருகே மாயமான சிறுமி எலி மருந்து சாப்பிட்டதால் உயிரிழந்த நிலையில், அவரை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞன், அவனது தாய் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 14ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் மாயமானார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி உடல்நிலை பாதித்திருந்த சிறுமியை அவரது வீட்டில் கொண்டு வந்து நாகூர் ஹனிபாவின் தாய் விட்டுச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், நாகூர் ஹனிபா, அவனது பெற்றோர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற நாகூர் ஹனிபா மதுரையிலுள்ள நண்பர் வீட்டிலும் பிறகு ஈரோட்டிலுள்ள உறவினர் வீட்டிலும் தங்கவைத்து கணவன் - மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் தங்களை போலீஸ் தேடுவது குறித்து தாய் மூலம் அறியவந்த நாகூர் ஹனிபா, தற்கொலை செய்துகொள்ளலாம் என சிறுமியிடம் கூறி எலி பேஸ்ட் விஷத்தை வாங்கி வந்துள்ளான். சிறுமி மட்டும் அதனை சிறிதளவு சாப்பிட்டதாகவும், நாகூர் ஹனிபா திடீரென தற்கொலை முடிவை கைவிட்டு விஷம் சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

எலி பேஸ்ட் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு சில நாட்கள் வைத்து சிகிச்சை அளித்த பின்னரே சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர் என்றும் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் கூறினார்.

மருத்துவர்களின் முதற்கட்ட அறிக்கையின்படி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் போதை ஊசிகள் அவருக்கு செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாகக் கூறிய எஸ்.பி. பாஸ்கரன், சிறுமியின் கையிலிருந்த ஊசி தழும்புகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது செலுத்தப்பட்டவை என்றார். 

இந்த விவகாரம் தொடர்பாக நாகூர் ஹனிபா, அவனது பெற்றோர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நாகூர் ஹனிபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. பாஸ்கரன் கூறினார்.

நாகூர் ஹனிபா வாங்கி வந்த எலி பேஸ்டை சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்தது தெரியவந்துள்ள நிலையில், கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் எனவும் எஸ்.பி. கூறினார். இந்த சம்பவத்தில் சிறுமி 18 வயதுக்குக் கீழானவர் என்பதால் அவருடைய புகைப்படத்தையோ, பெயரையோ, தவறான தகவல்களையோ வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்ததை அறிந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் ஒன்று கூடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். பேச்சுவார்த்தைக்குச் சென்ற போலீசார் மீதும் அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மீதும் அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், பேருந்தில் பயணித்த சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார், கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டி விரட்டி கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments