சுந்தரம் பைனான்ஸ் கலெக்சன் ஏஜெண்டு மீது கடத்தல் வழக்கு.. சிறுவனுடன் கார் பறிமுதல்..!

0 3056

திருச்சி அருகே தவணை தொகை கட்டாதவரின் காரை சிறுவனுடன் பறிமுதல் செய்த சுந்தரம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஹைதர் அலி. இவர் சுந்தரம் நிதி நிறுவனத்தில் கார் வாங்குவதற்காக 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

இதில் மூன்று லட்ச ரூபாயை ஹைதர் அலி திருப்பி செலுத்திய நிலையில் கடந்த 7 மாதமாக மாத தவணை தொகையை கட்ட இயலாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் ஹைதர் அலியின் மகனை காரில் ஏற்றிக் கொண்டு அவரது உறவினர் அந்த காரில் கடைவீதிக்கு சென்றுள்ளார். கார் வார்னர்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரது காரை மறித்த நிதி நிறுவன கமிஷன் ஏஜெண்டுகள் காரை பறிமுதல் செய்வதாக அறிவித்தனர்.

7 மாத நிலுவையான தவணை தொகையுடன் சேர்த்து ரூ 5.95 லட்சம் பாக்கி கடன் தொகையை கட்ட வேண்டுமென கூறி மிரட்டிய அந்த கலெக்சன் ஏஜெண்டுகள் காரில் இருந்த ஹைதர் அலியுன் மகனை இறக்கிவிடாமல் காரை பறித்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து ஹைதர் அலி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது
குடும்பத்தினர் உடனடியாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தங்கள் மகனை காருடன் கடத்திச் செல்வதாக புகார் அளித்தனர்.

இதையடுத்து கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் சேரன் தலைமையிலான போலீசார் கலெக்சன் ஏஜெண்டுகளிடம் இருந்து ஹைதர் அலியின் மகனை காவல் நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்தார். அந்த காரும் மீட்கப்பட்டது.

ஹைதர் அலி கொடுத்த புகாரின்பேரில் காருடன் கடத்தியதாக கூறப்பட்ட சுந்தரம் பைனான்ஸ் நிறுவன கமிஷன் ஏஜண்டுகள் இருவர் மீது
கடத்தல் மற்றும் கொலை மிரடல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனுக்கான தவணை தொகையை வசூலிப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களை சேர்ந்த குண்டர்களை கலெக்சன் ஏஜெண்டாக நியமித்து இருப்பதால் அவ்வப்போது இது போன்ற குற்ற சம்பவங்களில் சிக்கி வருவது தொடர்கதையாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments