மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 130 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு.!
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடற்கரையொட்டி நெருங்க உள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத வகையில் மார்ச் மாதத்தில் வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி நாகப்பட்டினத்துக்குக் கிழக்கு வடகிழக்கே 320 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்ததாக வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது அடுத்த 36 மணி நேரத்தில் வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரும் 7ஆம் தேதி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 8ஆம் தேதியன்று கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 9 ஆம் தேதி அன்று தமிழகத்தின் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீச வாய்ப்புள்ளதால் அடுத்த இரு நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இருநாட்களில் 9 மாவட்டங்களில் மரங்கள் முறியக்கூடும், பலமிழந்த மின் கம்பங்கள் சாயக்கூடும், விளம்பர பலகைகள் காற்றில் அடித்துச் செல்லப்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,அடுத்த மூன்று நாட்களுக்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, ஆந்திர மாநிலத்தை ஒட்டி கடலோர பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் காற்று வீசக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments