கம்பியை பிடித்துக் கொண்டு கால்களை சாலையில் தேய்த்தபடி பயணித்த மாணவன்..! வீடியோ காட்சிகள் வெளியீடு.!
சென்னையை அடுத்த ஆவடியில் அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் ஜன்னலைப் பிடித்தவாறு தொங்கிக் கொண்டு கால்கள் சாலையில் உரச, பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான பயணம் மேற்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
பூந்தமல்லியில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள், கூட்ட நெரிசலால் பேருந்தின் படிக்கெட்டுகளில் தொங்கிய படி பயணித்துள்ளனர்.
பேருந்தின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆவடி காவல்நிலைய தலைமை காவலர் பார்த்தசாரதி அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.
அப்போது ஜன்னல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி சென்ற மாணவன் ஒருவனது கால்கள் சாலையில் உரசி, அவன் கீழே விழும் நிலை ஏற்பட்டது. அதனைப் பார்த்துப் பதறிய காவலர் பார்த்தசாரதி, சப்தம் போட்டு பேருந்தை நிறுத்தினார்.
பேருந்து நின்றதால் மாணவர் காயங்களின்றி தப்பிய நிலையில், படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை எச்சரித்து வேறு பேருந்தில் செல்லுமாறு காவலர் பார்த்தசாரதி அறிவுறுத்தினார்.
Comments