நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்றியது திமுக.!
தமிழகத்தில் மொத்தமுள்ள 138 நகராட்சிகளுக்கான தலைவர், துணை தலைவர் பதவிகளில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சில நகராட்சிகளை சுயேட்சைகளின் ஆதரவோடு அதிமுக தன்வசமாக்கியது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சித் தலைவராக திமுகவின் பாஷா பதவியேற்றுக் கொண்டார். அந்த நகராட்சியில் திமுக சார்பில் பாஷாவும், அதிமுக சார்பில் முருகனும் போட்டியிட்ட நிலையில், பாஷா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் 13 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். வரலாற்றில் முதன்முறையாக எடப்பாடி நகராட்சி திமுக வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் நகராட்சி தலைவராக கலாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அந்த நகராட்சியின் முதல் பட்டியலின நகராட்சித் தலைவரான கலாநிதிக்கு, எம்.பி ராஜேஷ்குமார், அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல ராசிபுரம் நகராட்சி தலைவராக திமுகவின் கவிதா சங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
குமாரபாளையம் நகராட்சியில் திமுகவினர் 14 பேரும், அதிமுகவினர் 10 பேரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், சுயேட்சைகள் 9 இடங்களை கைப்பற்றினர்.
குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்ற தி.மு.கவுக்கு 3 கவுன்சிலர்களும், அ.தி.மு.கவுக்கு 7 கவுன்சிலர்களும் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால், திமுக வேட்பாளர் சத்தியசீலனை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் விஜய் கண்ணன், மற்ற சுயேட்சை கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்றினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகராட்சித் தலைவராக இரண்டாவது வார்டில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் திமுகவின் உதயமலர் பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு, எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழை வழங்கினர். அதேபோன்று, பொன்னேரி நகராட்சியில் திமுகவின் பரிமளம் விஸ்வநாதன், 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திருவேற்காடு நகராட்சியில் திமுகவின் மூர்த்தியும், திருத்தணி நகராட்சியில் சரஸ்வதியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
Comments