மறைமுகத் தேர்தலில் அரங்கேறிய களேபரங்கள்.!

0 1867

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பல இடங்களில் கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சாலை மறியல், வாக்குவாதம், தள்ளுமுள்ளு உள்ளிட்ட நிகழ்வுகளும் அரங்கேறின...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் மன்றத் தலைவர் பதவிக்கு செல்வி என்பவரை திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த சகுந்தலா என்பவரும் மனுத்தாக்கல் செய்தார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறைமுகத் தேர்தலில் சகுந்தலா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழையும் பெற்றுச் சென்றார். தலைமை அறிவித்த வேட்பாளரான செல்வி 6 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் திமுக தலைமை அறிவித்திருந்த நகர மன்ற தலைவர் வேட்பாளர் இஜாஸ் அகமது விற்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளர் சபீர் அகமது என்பவரும் மனுத்தாக்கல் செய்ததால், அங்கு தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதேபோல் உதயேந்திரம் பேரூராட்சிக்கு நடைபெறவிருந்த மறைமுகத் தேர்தலும் நிறுத்தி வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் பங்கேற்க திமுக உறுப்பினர்கள் எவரும் வரவில்லை என்று கூறப்படும் நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்தவர் 8 வாக்குகளும் திமுகவைச் சேர்ந்தவர் 6 வாக்குகளும் பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 2 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து திமுக வேட்பாளர் வடிவேலு என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். பேரூராட்சி தலைவர் தேர்தலில் அரங்கேறிய இந்த சம்பவங்களால் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments