மறைமுகத் தேர்தல்.. கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் திமுக வெற்றி..!

0 2115
மறைமுகத் தேர்தல்.. கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் திமுக வெற்றி..!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். சில இடங்களில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும் அதே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடமும் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல அதிமுக 3 இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரி அருள்ராஜை எதிர்த்து, திமுகவின் சாந்தி போட்டியிட்டார். சுயேட்சைகள், பா.ம.க. ஆதரவுடன் 11 வாக்குகள் பெற்று திமுகவின் சாந்தி வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 4 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

 கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக கூட்டணி கட்சியான விசிக வேட்பாளரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் போட்டியிட்டார். ஜெயந்தி 23 வாக்குகளும், விசிக வேட்பாளர் 3 வாக்குகளும் பெற்ற நிலையில், ஜெயந்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேனி அல்லிநகரம் நகராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சற்குணத்தை வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததோடு, திமுக சார்பில் ரேணு பிரியா வேட்புமனுதாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பின்னர் ரேணுபிரியா நகராட்சித் தலைவராக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, கோவை கருமத்தம்பட்டி நகராட்சியிலும் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட திமுக பெண் வேட்பாளர் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

 குளச்சல் நகராட்சியில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஜான்சன் சார்லஸை, எதிர்த்து அதே கட்சியைச் சேர்ந்த நசீர் என்பவர் போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். இருவருக்கும் தலா 12 ஓட்டுகள் கிடைத்த நிலையில், குலுக்கல் முறையில் நசீர் நகராட்சித் தலைவராக தேர்வானார்.

 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சியிலும் தலைவர் பதவிக்கான தேர்தலில், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட போட்டி வேட்பாளர் 5 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 3 அதிமுக, 2 பா.ம.க., 2 சுயேட்சை கவுன்சிலர்களும் மோகனவேலுக்கு ஆதரவு அளித்திருந்தனர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியிருந்த நிலையில், திமுகவைச் சேர்ந்தவர் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அங்கு வாக்குவாதம், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டசேரியில் சுயேட்சை கவுன்சிலர் பேரூராட்சி தலைவரானார். மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6 இடங்களிலும், சுயேட்சைகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒரு வார்டில் வெற்றி பெற்றிருந்த அதிமுக கவுன்சிலரும் சுயேட்சைக்கு ஆதரவு அளித்தார். இதனால், சுயேட்சை கவுன்சிலர் ஆயிஷா பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் மதிமுக கவுன்சிலரின் ஆதரவுடன், பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக தன்வசமாக்கியுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்த பேரூராட்சியில் தனித்து போட்டியிட்ட மதிமுக ஒரு வார்டில் வெற்றி பெற்றது. அதிமுக 4 இடங்களிலும் சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றிருந்த நிலையில், மதிமுக கவுன்சிலர், சுயேட்சைகள் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றது.

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அமுதாவை எதிர்த்து, அதேக் கட்சியின் செல்வராஜ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதேபோன்று, விசிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தருமபுரி மாவட்டம் பொ.மல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவியையும் ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கைப்பற்றினார். இதனால், ஆத்திரமடைந்த விசிகவினர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றிச் செல்ல முயன்ற போது, நடுரோட்டில் படுத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments