அணுமின் நிலையம் மீது குண்டுவீசித் தாக்குதல்.!
உக்ரைனில் சபோரிசியாவில் உள்ள அணுமின் நிலையத்தின் பயிற்சிக் கட்டடம் மீது ரஷ்ய ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் அது தீப்பற்றி எரிந்தது.
ஒருமணி நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், அணுமின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் சபோரிசியா மாநிலத்தில் எனர்கோடர் என்னுமிடத்தில் உள்ள அணுவுலை ஐரோப்பாவிலேயே மிகப்பெரியதாகும். இது செர்னோபில்லில் உள்ளதைவிடப் பல மடங்கு பெரியது என்றும் கூறப்படுகிறது.
உக்ரைனின் மின்தேவையில் 25 விழுக்காடு இந்த அணுமின் நிலையத்தில் இருந்தே பெறப்படுகிறது. இந்த அணுமின் நிலையத்தின் மீது இன்று அதிகாலை 5:20 மணிக்கு ரஷ்ய ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. குண்டுவீச்சில் பயிற்சிக் கட்டடத்தில் தீப்பற்றி எரிந்தது.
தீயை அணைக்கச் சென்ற அவரக்காலச் சேவைகள் படையினரை முதலில் ரஷ்யப் படையினர் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பன்னாட்டு அணுவாற்றல் முகமை ஆகியோர் உக்ரைன் அவசரக்கால சேவைகள் படையினரை அணுமின் நிலைய வளாகத்துக்குள் அனுமதிக்கும்படி ரஷ்யாவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து ரஷ்யப் படைவீரர்கள் வழிவிட்டதால் அவசரக்காலச் சேவைகள் படையினர் அங்குச் சென்று தீயணைப்புப் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பொறுப்பற்ற செயலால் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்புக்குமே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சபோரிசியா அணுஉலையில் தாக்குதலுக்குப் பின் அங்குள்ள நிலவரம் குறித்து உக்ரைனிய அரசுடன் தொடர்பில் உள்ளதாகப் பன்னாட்டு அணுவாற்றல் முகமை தெரிவித்துள்ளது.
அணுவுலையின் அருகில் கதிர்வீச்சின் அளவு அதிகரித்துள்ளதாக உக்ரைன் அதிகாரியின் தகவலை மேற்கோள் காட்டிச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள ரஷ்ய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் திமித்ரோ குலேபா குற்றஞ்சாட்டியுள்ளார். தீப்பிடித்துள்ள நிலையில் அணுவுலை வெடித்தால் அது செர்னோபில்லில் உள்ளதைவிடப் பத்துமடங்கு பேரழிவைத் தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அணுமின் நிலையத்தின் பயிற்சிக் கட்டடத்தில் பற்றி எரிந்த தீ முழுவதும் ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டதாக உக்ரைன் அவசரக் காலச் சேவைகள் படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே சபோரிசியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும், அதனை உக்ரைன் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து இயக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments