நாளை மறைமுக தேர்தல்.. திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

0 3634

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு கும்பகோணம் மாநகராட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர் உட்பட மற்ற 20 மாநகராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பிரியா ராஜன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தியான பிரியா ராஜன் 29 வயதான, எம்காம் பட்டதாரி ஆவார்.

அடுத்தபடியாக கோவை மாநகராட்சிக்கு கல்பனாவும், மதுரை மாநகராட்சிக்கு இந்திராணியும், திருச்சியில் அன்பழகனும், சேலத்தில் ராமச்சந்திரனும் திமுக சார்பில் மேயர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் தினேஷ்குமார், ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டம் பயின்றவர் ஆவார். கரூர் மாநகராட்சியில் கவிதா கணேசன், ஈரோடு மாநகராட்சியில் நாகரத்தினம், ஆவடியில் உதயகுமார், காஞ்சிபுரத்தில் மகாலட்சுமி யுவராஜ், தாம்பரம் மாநகராட்சியில் வசந்தகுமாரி ஆகியோர் மேயர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகராட்சியில் சரவணன், தூத்துக்குடி மாநகராட்சியில் ஜெகன், நாகர்கோவில் மாநகராட்சியில் மகேஷ், சிவகாசி மாநகராட்சியில் சங்கீதா இன்பம் ஆகியோரை மேயர் வேட்பாளர்களாக திமுக நிறுத்தியுள்ளது.

சுஜாதா அனந்தகுமார் வேலூரிலும், சுந்தரி கடலூரிலும், ராமநாதன் தஞ்சாவூரிலும், சத்யா ஓசூரிலும், இளமதி திண்டுக்கலிலும் போட்டியிடுகின்றனர். மேயர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 9 பேர் ஆண்களும், 11 பேர் பெண்களும் ஆவர்.

 21 மாநகராட்சிக்கான துணை மேயர் பதவியிடங்களில் சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவியும், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகரட்சி துணை மேயர் பதவியும், விசிகவுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயரும், மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக, மற்ற 15 துணை மேயர் பதவியிடங்களிலும் திமுக போட்டியிடுகிறது. சென்னை மாநகராட்சி துணை மேயராக மகேஷ்குமாரும், திருச்சி துணை மேயராக திவ்யா தனக்கோடியும், கோயம்புத்தூர் துணை மேயராக வெற்றிச்செல்வனும், நெல்லை துணை மேயராக ராஜூவும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல, ஈரோடு, தூத்துக்குடி, தாம்பரம், வேலூர், தஞ்சாவூர், கரூர், ஓசூர், திண்டுக்கல், சிவகாசி, நாகர்கோவில் மாநகராட்சிக்கான துணை மேயர் வேட்பாளர் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது. மேயர், துணை மேயர் பதவியிடங்களுக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 11 பேர் முதுகலை பட்டதாரிகளும், 20 பேர் இளங்கலை பட்டதாரிகளும் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments