உத்தரப் பிரதேசத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு : ஆட்சியைத் தக்க வைப்போம் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை!

0 2282

உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் ஆறாம் கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக 80 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசச் சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று ஆறாம் கட்டமாகக் கோரக்பூர், பல்லியா உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாநிலக் காவல்துறையினருடன், மத்தியத் துணைராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

கோரக்பூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களிக்கச் செல்லுமுன் கோரகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். கோரக்பூர் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.

 

வாக்குச் செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதி மக்கள் வாக்களித்துள்ளதாகவும், 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் தெரிவித்தார்.

கோரக்பூர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கிசன் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது பாஜக முந்நூற்றுக்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவித்தார்.

 

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிடும் சமாஜ்வாதிக் கட்சியின் பெண் வேட்பாளர் சுபாவதி சுக்லா தனது பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

 

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவ பிரதாப் சுக்லா குடும்பத்துடன் கோரக்பூரில் வாக்களித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments