ஆடு களவாணிக்கு குண்டாஸ் பஞ்சாயத்தில் எல்லாரும் சூனா பானா ஆகமுடியுமா ? சப் இன்ஸ்பெக்டர் ராஜினாமா..!

0 4117

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆடு திருடர்களை குண்டர் தடுப்புசட்டத்தில் அடைக்காமல் காப்பற்றுவதற்காக 3 லட்சம் ரூபாய் பேரம் பேசிய ஆடியோ வெளியான நிலையில் , சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் காவல் துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இட மாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சல் அடைந்ததாக கூறி எஸ்.ஐ எடுத்த திடீர் முடிவு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்தவர் கங்கை நாத பாண்டியன். இவர் இன்னோவா கார்களில் ஊர் ஊராக சென்று ஆடுகளை திருடிச்சென்ற ராம நாதபுரத்தை சேர்ந்த ஆடு களவானிகளை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் அந்த ஆடு திருடர்கள் மீது போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஆடு களவாண்டதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உதவி ஆய்வாளர் கங்கை நாத பாண்டியனை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

அப்போது உதவி ஆய்வாளர் கங்கை நாதபாண்டியன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடைசியாக குற்ற வழக்கு பதிவு செய்தவர் என்பதால், தான் நினைத்தால் மட்டுமே குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க முடியும் என்றும் ஆரம்பத்தில் பேசி இருந்தால், குற்றவாளியை காவல் நிலைய ஜாமீனில் விட்டிருப்பேன் என்றும் தலைமறைவாக இருக்கும் ஆசிக்கை தான் நினைத்தால் சுட்டிருப்பேன் என்றும் சூனா பானா போல வீராவேசத்துடன் விரிவாக பஞ்சாயத்து பேசிய எஸ்.ஐ. கானா பானா , அவர்களிடம் 3 லட்சம் ரூபாயை லஞ்சம் கேட்டதாக இரு ஆடியோக்கள் வெளியானது

இதையடுத்து எஸ்.ஐ கங்கை நாத பாண்டியனை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். இந்த நிலையில் தன்னை ஆயுதப்படைக்கு மாற்றியதால் கடுமையான மன உளைச்சல் அடைந்ததாக கூறிய கங்கை நாத பாண்டியன் , தனது காவல்துறை பதவியை ராஜினாமா செய்வதாக , திரு நெல்வேலி சரக டிஐஜிக்கு கடிதம் அளித்துள்ளார்

அதில் தான் பேசியதாக யாரோ சிலர் எடிட் செய்து அவதூறாக பரப்பும் ஆடியோ வை உண்மை என்று நம்பி தனக்கு தண்டனை கொடுத்திருப்பதால் கடுமையான மன உளைச்சல் அடைந்ததாக கூறிய அதனால் காவல்துறையில் இருந்து விலகுவதாகவும் கங்கை நாத பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆடு திருடர்களை குண்டர் தடுப்புசட்டத்தில் அடைக்காமல் காப்பற்றுவதற்காக லஞ்சம் கேட்ட புகாரில் விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன்-ஐ பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஆணை, அவர் விளாத்திகுளம் காமராஜர் நகரில் வாடகைக்கு தங்கியிருந்த இல்லத்தில் கிராம் நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் மூலமாக ஒட்டப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments