உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐநா.பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகநாடுகள் தங்கள் பக்கம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் குறித்து விவாதிக்க ஐநா.பொதுச்சபையின் பதினோராவது அவசரக் கூட்டம் நியுயார்க் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வாசிலி நெபின்சியா, மக்களை கேடயமாகப் பயன்படுத்தி உக்ரைன் போர் புரிவதாக குற்றம் சாட்டினார். இந்த போர் அமைதியான முறையில் முடிவடையாமல் பேச்சுவார்த்தையை இழுபறியாக்குவதாகவும் உக்ரைன் மீது அவர் குற்றம் சாட்டினார். மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தவில்லை என்றும் கிரிமீயா பற்றி பேச்சு நடத்த முடியாது என்றும் ரஷ்ய பிரதிநிதி தெரிவித்தார்
இந்தக் கூட்டத்தில் ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. சபையில் நடந்த வாக்கெடுப்பில், 141 வாக்குகள் ரஷ்யாவுக்கு எதிராகவும் 5 வாக்குகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் பதிவாகின. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
ஒரே வாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் மூன்று முறை ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட போதும், இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.பொதுச்சபையில் பெரும்பாலான ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். இந்தத் தீர்மானத்தால் உலக அரங்கில் ரஷ்யாவுக்கு நெருக்குதல் அதிகரிக்கும்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தமது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி ,ரஷ்யா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
Comments