கவுன்சிலர்கள் பதவியேற்பு... 4-ந் தேதி மறைமுகத் தேர்தல்

0 2206
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெற்று, 22-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு ஆணையர் ககன் தீப் சிங்க் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மதுரை மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். வெற்றி பெற்ற உறுப்பினர்கள் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனர்.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 35ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் பேச்சியம்மாள் கண்ணீர் மல்க பதவியேற்றுக் கொண்டார். தேர்தல் முன் விரோதத்தால் அவரது மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், பதவியேற்பு விழாவில் மகனை நினைத்து கண்ணீர் மல்க பதவியேற்றுக் கொண்டார்.

அதேபோல, திசையன்விளை பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக, பா.ஜ.க. கவுன்சிலர்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பதவியேற்பு விழாவுக்கு ஹெல்மெட் அணிந்து வந்திருந்தனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக உறுப்பினர் பிரேமா, உணர்ச்சி பெருக்கில் நா தழுதழுக்க பதவியேற்றுக் கொண்டார். அப்போது, அவரது கணவரும் முன்னாள் கவுன்சிலருமான சங்கர் அவரை ஆறுதல்படுத்தி அழைத்துச் சென்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் பதவியேற்பு விழா முடிந்தவுடன் சில கவுன்சிலர்கள் வேனிலும், கார்களிலும் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் கவுன்சிலர்களுடன் வந்திருந்த திமுக - பா.ஜ.க. ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னை அடுத்த பூந்தமல்லி நகராட்சியில் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த போது விபத்தில் சிக்கி, காலில் முறிவு ஏற்பட்டதால், வீல் சேரில் அமர்ந்து பிரச்சாரம் செய்த திமுக உறுப்பினர் காஞ்சனா, வெற்றி சான்றிதழையும் வீல் சேரில் அமர்ந்திருந்தவாறே பெற்றுக் கொண்டார். தற்போது பதவியேற்பு விழாவிற்கும் வீல் சேரில் வந்து பதவியேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கொளப்பலூர் பேரூராட்சியில் பதவியேற்பு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகைப்படத்தை இடம்பெறச் செய்யவில்லை எனக் கூறி, அதிமுக உறுப்பினர்கள் பதவியேற்காமல் வெளிநடப்பு செய்தனர். பின்னர், பேச்சுவார்த்தைக்கு பிறகு பதவியேற்றுக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட இடங்களில் பதவியேற்க வந்த கவுன்சிலர்கள் அரசியல் கட்சியினரால் வேனிலும், கார்களிலும் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments