விமானங்களில் வந்து கார்க்கிவ் நகரில் ரஷ்யப்படை தாக்குதல்..!
ரஷ்யாவில் இருந்து விமானங்களில் வந்த படையினர் கார்க்கிவ் நகரில் இறங்கித் தாக்குதல் நடத்தி வருவதாக, உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யப் படையினரின் தாக்குதல் ஏழாம் நாளாக இன்றும் நீடிக்கிறது. கீவ் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதால் இரவில் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது.
உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவில் விமானங்களில் வந்த ரஷ்யப் படையினர் பாராசூட் மூலம் தரையிறங்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படையினர் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாகவும், தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயன்று குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதால் கார்க்கிவ் நகரில் இடிந்த கட்டடங்களின் சிதைவுகள் தெருக்களில் சிதறிக் கிடக்கின்றன.
இதனிடையே வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலைநாடுகளில் உள்ள ரஷ்யத் தொழிலதிபர்களின் சொகுசுப் படகுகள், குடியிருப்புகள், தனி விமானங்கள் ஆகியன முடக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் எதிரொலியாக அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை 5 விழுக்காடு அதிகரித்து ஒரு பீப்பாய் 110 டாலராக உள்ளது.
ரஷ்யாவின் சகாலின் எண்ணெய் வயலில் ரஷ்ய, இந்திய, ஜப்பானிய நிறுவனங்களுடன் இணைந்து எண்ணெய் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவைச் சேர்ந்த எக்சான்மொபில் நிறுவனம் அங்கிருந்து படிப்படியாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
இதேபோல் பிபி, செல் நிறுவனங்களும் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளன. அதே நேரத்தில் பிரான்சின் டோட்டல் எனர்ஜீஸ் நிறுவனம் ரஷ்யாவில் தொடர்ந்து தொழில்செய்யும் என அறிவித்துள்ளது.
Comments