உக்ரைனில் வான் தாக்குதல் எச்சரிக்கையால் பரபரப்பு
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் இன்று தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ்-வை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து வலுவான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ் மற்றும் செர்னிகோவ் நகரிலும் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
கார்கிவில் ரஷ்ய விமானப்படையினர் தரையிறங்கியிருப்பதாக காலையில் தகவல் கிடைத்தது முதலே அங்கு ஏவுகணைத்தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்குள்ள மருத்துவமனையை குறிவைத்தும், அரசு அலுவலகங்களை குறிவைத்தும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை அலுவலகம் மீது வைக்கப்பட்ட குறி தவறி பல்கலைக்கழக கட்டிடம் மீது குண்டு பாய்ந்து தகர்ந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கார்கிவ் நகர் வீதிகளில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களும் பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்து வருவதால் அந்நகர் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. 7-வது நாளான இன்று போரை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள் கார்கிவ் நகரை கைப்பற்றி விடும் நோக்கத்தில் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய கார்கிவ்வில் உள்ள ராணுவ வீரர்கள் தங்குமிடத்தை குறிவைத்தும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
கார்க்கிவில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 112 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதன் எதிரொலியாக அண்டை நாடுகளில் தஞ்சமடைய உக்ரைனிய மக்கள் கூட்டம் கூட்டமாக பயணித்து வருகின்றனர். இதனால் அந்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை கைப்பற்றியிருப்பதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
Comments