கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 26 சிறப்பு விமானம்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அங்கிருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது. பிரதமர் உத்தரவின் பேரில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்துவர ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து அங்கு சிக்கி இருக்கும் இந்தியர்கள் ஆபரேஷன் கங்கா மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டதை அடுத்து ஹங்கேரி, போலந்து, ரூமேனியா நாடுகள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
புகாரெஸ்ட், புடாபெஸ்ட் விமான நிலையங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்கள், உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை அடுத்து அங்குள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு பணியில் இருந்த இந்திய அதிகாரிகள் உக்ரைன் மேற்கு பகுதி எல்லைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் கார்கிவ் உள்ளிட்ட ஆபத்து மிக்க பகுதிகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தவும், மேலும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை இயக்கவும் பிரதமர் உத்தரவிட்டார். இதையடுத்து, மூன்றே நாட்களில் 26 விமானங்களை அனுப்பி இந்தியர்களை அழைத்துவரும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் எல்லையில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை போலந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் லிவிவ், டெர்னொபில் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் விரைவாக Budomierz எல்லை வழியாக போலந்திற்குள் வருமாறும், Shehyni-Medyka எல்லையை தவிர்க்குமாறு போலந்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Comments