சிவாலயங்கள் தோறும் மகா சிவராத்திரி.!

0 2556

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன. மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி விரதம் இருந்து, முழுக்க முழுக்க சிவனிடம் மனம் லயித்து, இரவு கண் விழித்து நான்கு சாமத்திலும் சிவ வழிபாடு செய்யவேண்டும். அவ்வாறு செய்வதால் துன்ப இருள் அகன்று சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் வாழ்வு செழிக்கும் என்பது நம்பிக்கை.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஸ்படிக பூஜை, கால பூஜைகளைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி உற்சவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் ஆயிரத்தெட்டு வலம்புரி சங்குகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் 678 கிலோ சந்தனத்தை பயன்படுத்தி 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை உருவாக்கி, “ஓம் நமச்சிவாயா” என்ற எழுத்து வடிவில் அமைத்து பெண்கள் வழிபட்டனர். வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் இந்த லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தழுவிய மகாதேவர் கோவிலில் ஆயிரத்து எட்டு சங்குகளைக் கொண்டும் நெல் மணிகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட சிவபெருமான் - நந்தி திருவுருவத்தை திரளான பக்தர்கள் தரிசித்துச் சென்றனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கோயில் முன்பு 108 நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் பங்கேற்ற இசை விழா நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபட்டனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயத்தில் 41 அடி உயர ராஜ லிங்கத்திற்கு கிரேன் மூலம் 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முத்தீஸ்வரர் மற்றும் பொம்மி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி முழக்கத்துடன் சுவாமியை வழிபட்டனர். 

மகா சிவராத்திரியையொட்டி திருச்சி திருவெறும்பூரை அடுத்துள்ள கூத்தைப்பார் மகா காளீஸ்வரி ஆலயத்தில் 61அடி உயரம் கொண்ட, கருங்கற்களால் ஆன சிவலிங்கத்தின் லிங்க திருமேனிக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் ஹரஹர மகாதேவா என முழக்கமிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments