உக்ரைன் - ரஷ்யா போர்.. பேச்சுவார்த்தை தோல்வியா? மீண்டும் உக்கிரமாகும் யுத்தம்.!

0 2954

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் - ரஷ்யா நாடுகள் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. 

உக்ரைன் மீது ஆறாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்துவதால் முக்கிய நகரங்கள் போர்க்களமாக காட்சியளிக்கின்றன.

இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா-உக்ரைன் இடையிலான முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரஸில் நேற்று நடைபெற்றது. அப்போது, ரஷ்ய படைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

நீண்டநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ரஷ்யாவும், உக்ரைனும் அறிவித்துள்ளன. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இரு நாடுகளும் விரைவில் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று பேச்சுவார்த்தைக்காக தாக்குதல் வேகத்தை ரஷ்யா குறைத்திருந்த நிலையில், மீண்டும் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரிலுள்ள அரசு தலைமை அலுவலக கட்டிடம் மீது ரஷ்ய படை ஏவுகணை தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஏவுகணை தாக்குதல் கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமான காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன. இந்த கோர தாக்குதலில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமானோர் காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியான கெர்சன் நகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டதாக அந்த நகரத்தின் மேயர் அறிவித்திருக்கிறார்.

மேலும், உக்ரைன் தலைநகரான கீவ் நகரை நோக்கி ரஷ்ய படைகள் சுமார் 65 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. தலைநகரை கிவ்வை கைப்பற்றும் நோக்கில், அங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட ஆண்டனோவ் நகர் வரை ரஷ்ய படை சென்றுள்ளது. ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட போர் ஆயுதங்களுடன் ரஷ்ய படை சூழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

கிவ் நகருக்கும், கார்கீவ் ந்கருக்கும் இடையே அமைந்துள்ள Okhtyrka பகுதியில் உக்ரைன் ராணுவ மையத்தை குறி வைத்து ரஷ்ய படை நடத்திய பீரங்கி தாக்குதலில் உக்ரைன் தரப்பில் 70 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments