''நான் முதல்வன்'' திறன் மேம்பாட்டுக்கு புதிய திட்டம்.!
தமிழக மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், அவர்களின் திறனை மேம்படுத்தி தனித்திறமை வாய்ந்தவர்களாக மாற்றவும் நான் முதல்வன் என்ற புதிய திட்டத்தை தனது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்..
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ''நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்'' என்ற புதிய திட்டத்தின் இலட்சினையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழக மாணவ, மாணவர்களின் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம் மூலம் பள்ளி பருவத்திலேயே மாணவர்களின் தனித்திறமைகள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது.
தமிழில் தனித்திறன் பெறவும், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாக பேசவும் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேற்படிப்புக்கு விண்னப்பிப்பது அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகள் தயாராவது குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம்கள், இந்தியா முழுவதுமுள்ள வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் இளைஞர்களுக்கு தெரிவிக்கப்படும்.
கல்வி கடன்கள், உதவி தொகை அளிக்கும் நிறுவனங்கள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த தகவல்களுடன் வலைதளமும், செயலியும் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.2026ஆம் ஆண்டுக்குள் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் இருக்கும் மொத்த உயர்கல்வி நிறுவங்களில் 33சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளது என்றார்.
அதே நேரத்தில், மாணவர்கள் இடையே தனித்திறமையும், திறமை குறைபாடும் இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முதலமச்சர், இந்தியாவிலுள்ள இளைய சக்திகளை பார்த்து உலக நாடுகள் பயப்படுவதாகவும், அவர்களை இன்னும் முழுமையான சக்தியாக, வலுவான சக்தியாக உருவாக்கும் வகையில் தான் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
பெற்றோர்களின் ஆசைக்காக படிக்காமல் தனக்கு எந்த படிப்பில் விருப்பமும், ஆர்வமும் இருக்கிறதோ அந்த துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர், கல்வியை தாண்டி தனித்திறமை இருந்தால் தான் உலக அளவிலான போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற முடியும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
படிப்பு என்பது பட்டம் சார்ந்ததாக இல்லாமல், திறமை சார்ந்ததாக மாற வேண்டும் எனவும்,அனைத்து பள்ளிகளும் வழிகாட்டி மையங்களாக மாறும் எனவும் அவர் உறுதியளித்தார்.
Comments