தாம் கேட்ட பகுதிக்கு பணிமாறுதல் கிடைக்காத ஆத்திரத்தில், நீதிமன்ற வளாகத்திலேயே மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் கைது.!
சேலத்தில் தாம் கேட்ட பகுதிக்கு பணிமாறுதல் கிடைக்காத ஆத்திரத்தில், நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
அஸ்தம்பட்டியிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற எண் 4ல் மாஜிஸ்ட்ரேட் பொன்பாண்டி என்பவர் வழக்கமான பணிகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது உள்ளே நுழைந்த அலுவலக உதவியாளரான பிரகாஷ் என்பவர், தாம் ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்ததாகவும் மேட்டூர் நீதிமன்றத்துக்கு மாறுதல் கேட்ட நிலையில், சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.
"உங்களுடைய பணி மாறுதலுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை, நீங்கள் மாவட்ட நீதிபதியைச் சென்று பாருங்கள்" என மாஜிஸ்ட்ரேட் பொன்பாண்டி கூறியுள்ளார்.
அதனை காதில் வாங்காத பிரகாஷ், சட்டையில் தாம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றை எடுத்து மாஜிஸ்ட்ரேட்டின் நெஞ்சுப் பகுதியில் குத்த முயன்றுள்ளார்.
பதறிப்போய் மாஜிஸ்ட்ரேட் அவனைத் தடுத்து தள்ளிவிட்ட நிலையில், அவரது நெஞ்சுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. சக ஊழியர்கள் அதிர்ச்சியாகி உடனடியாக காயமடைந்த மாஜிஸ்ட்ரேட் பொன்பாண்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரகாஷை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Comments