ரூ 15 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த டபுள் ஆக்ட் டகால்டி ஷகினா..!
காரைக்காலில் நகைக்கடை அதிபருடன் செல்போனில் காதல் மொழி பேசி, அதனை பதிவுசெய்து வைத்துக் கொண்டு 15 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்ட கேடிப் பெண்ணுக்கு எலும்பு முறிந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலைச் சேர்ந்தவர் நகைகடை அதிபர் அப்துல் காதர். இவர் தனது ஆதரவாளர் சாதிக் உடன் வந்து தன்னை தாக்கி மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக ஷகினா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
அதில், தனது கல்லூரித் தோழியான செரின் என்பவர் கோவையில் புலனாய்வு நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருவதாகவும், அவர் அப்துல்காதரின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவருக்கு 2 வது மனைவி உள்ளாரா ? என்று விசாரிக்கச் சொன்னதாகவும், அப்படி விசாரித்தபோது தனக்கும் அப்துல் காதருக்கும் வாட்ஸ்அப் மற்றும் செல்போன் உரையாடல் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறி இருந்தார் ஷகினா.
அப்துல்காதருக்கு 2 வது மனைவி இருப்பதை தான் கண்டுபிடித்து விட்டதால், அதனை மறைப்பதற்காக தன்னிடம் 15 லட்சம் தருவதாகக் கூறி தன்னை தேடி வீட்டிற்கு வந்து தன்னை திட்டி தாக்க முயன்றதால் மாடியில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார் ஷகினா.
போலீசாரின் விசாரணையில் செரின் என்று பேசிய பெண்ணும் ஷகினாவும் ஒரே நபர்தான் என்றும், தொழில் அதிபர்களின் செல்போன் நம்பர்களை பெற்று அதில் காதல் மொழி பேசி மதிமயங்கும் நபர்களின் உடையாடல்களை பதிவு செய்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் டகால்டி லேடி என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அந்தவகையில், அப்துல்காதர் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் அறிமுகமான ஷகினா அவரிடம் காதல் மொழி பேசி தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். பெருச்சாளிக்கு பெரிய சைஸ் தேங்காய் கிடைத்த மகிழ்ச்சியில், அப்துல் காதரும் அழகியான அந்தப் பெண்ணிடம் மனம் விட்டு அந்தரங்க ஆசைகளைப் பகிர்ந்ததாக கூறப்பட்டுகின்றது.
அப்படி அவர் பேசிய காதல் மொழிகளை அப்படியே வாக்குமூலம் போல பதிவு செய்து வைத்துக் கொண்ட சகினா, அதனைக் காண்பித்து செரின் என்ற பெயரில் பிளாக் மெயில் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த குரல் பதிவுகளைத் தரவேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டி உள்ளார். 100 ரூபாய் நோட்டை வாட்ஸ் அப்பில் பதிவிட்டு இந்த நோட்டை தங்களிடம் தரும் தனது தோழியிடம் 15 லட்சம் ரூபாயை கொடுத்து விடக் கூறி உள்ளார். இதனால் மானம் போய்விடக்கூடாது என்று பயந்த அப்துல் காதர், தனது ஆதரவாளரான சாதிக் உள்ளிட்டோரை அனுப்பி பணம் கொடுப்பது போலச் சென்று அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி ஷகினாவை பிடிக்க சென்றபோது அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்து முதல் மாடியில் இருந்து குதித்ததில் ஷகினாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக ஷகினா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் விசாரித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பின் அறிமுக இல்லாத பெண்ணாக இருந்தாலும் , பழகிய பெண்களாக இருந்தாலும் தேவையற்ற அந்தரங்க உரையாடல்களை தவிர்த்தால் இது போன்ற விபரீதங்கள் நிகழாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Comments