உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர்
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ் தெரிவித்தார். ரஷ்யா அறிவித்துள்ள அணுசக்தி அவசரநிலை உக்ரைனுக்கு மட்டுமின்றி அனைவருக்குமானது எனக் குறிப்பிட்டார்.
ஐ.நா. பொதுச் சபையின் 11-வது அவசர சிறப்புக் கூட்டத்தில் 193 உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவும், அங்கிருக்கும் ரஷ்யப் படைகள் நிபந்தனைகளின்றி வெளியேற்றப்படவும் வேண்டும் என்றார்.
அணுசக்தி தற்காப்பு பிரிவை தயார் நிலையில் இருக்க அதிபர் புதின் உத்தரவிட்டது உக்ரைனுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கான நெருக்கடி என்றார்.
அணு ஆயுத மோதல் என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று என்று தெரிவித்த ஆண்டானியோ குட்ரெஸ், அதன் மூலம் ஒரு பயனையும் அடைய முடியாது என்றார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்றும், போர் நிறுத்த நடவடிக்கையை உக்ரைன், ரஷ்யா மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக பேசிய ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் Vassily Nebenzia, உக்ரைனை கைப்பற்றும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும், ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் உக்ரைன் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
ரஷ்யாவின் அணுசக்தி அவசர நிலை, மூர்க்கதனமானது என்றும், அதனால் உக்ரைனுக்கு மற்றும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என்றும் உக்ரைன் பிரதிநிதி குறிப்பிட்டார்.
இந்தியா உள்பட உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் இன்று உரை நிகழ்த்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் உரையை தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments