போர் முடிவுக்கு வருமா? உக்ரைன் - ரஷ்யா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

0 3945

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் ஐந்தாவது நாளாக நீடித்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் பிரதிநிதிகள் குழு பெலாரஸ் சென்றுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளன. உக்ரைனுக்குள் புகுந்து சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா, பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அழைப்பு விடுத்திருந்தது.

பேச்சுவார்த்தைக்கு தாங்களும் தயாராக இருப்பதாகக் கூறிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஆனால் ரஷ்யா சொல்வது போல் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார். இதனிடையே, ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு நாடுகளும், நேட்டோ படைகளும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறிய புதின், அணு ஆயுத தடுப்பு படைகளை உச்சபட்ச உஷார் நிலையில் வைக்க தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ரஷ்ய பிரதிநிதிகள் குழு ஏற்கனவே பெலாரசில் முகாமிட்டிருக்கும் நிலையில், தற்போது உக்ரைன் பிரதிநிதிகள் குழுவும் பெலாரஸ் சென்றுள்ளது. இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த சில மணி நேரங்களில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடுகளை பெலாரஸ் அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் செர்னோபில் அருகே பிரிப்யத் நதி பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன்-ரஷ்யா போர் இந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments