ராணுவத்திற்கு புதின் புதிய உத்தரவு.. பேச்சுவார்த்தைக்கு முன்வந்த உக்ரைன்..!
அணு ஆயுத தடுப்பு படைகளை அதிக உஷார் நிலையில் வைக்க ரஷ்ய ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு முன்வந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 4 நாட்களை எட்டியுள்ள நிலையில், பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடத்த குழு அனுப்ப தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்திருந்தது. இந்நிலையில், உக்ரைனை தாக்க பெலாரஸ் நாட்டை ரஷ்யா பயன்படுத்துவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், அதற்கு பதில் வேறொரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் பங்கேற்க தயார் என்றும் அதிபர் செலன்ஸ்கி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக பெலாரஸ் எல்லையில் இரு தரப்பினரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என உக்ரைன் அதிபர் அலுவலகம் தரப்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ ஆக்ரோஷ்மாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட அதிபர் புதின், அணு ஆயுத தடுப்பு படைகளை அதிக உஷார் நிலையில் வைக்க தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இந்த சூழலில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக உக்ரைன் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பேச்சுவார்த்தை தொடர்பாக பெலாரஸ் நாட்டின் அதிபர் லுகாஷென்கோவுடன், உக்ரைன் அதிபர் செல்ன்ஸ்கி அவசரமாக கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பினை உக்ரைன் அரசு வீணடித்து வருவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டியிருந்தார்.
Comments