உக்கிரமாக தாக்குகிறது ரஷ்யா... பற்றி எரிகிறது உக்ரைன்

0 2275
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஆவேச தாக்குதலை தொடுத்துள்ளது. அந்நாட்டின் கார்கிவ் நகரை கைப்பற்றி உள்ள ரஷ்யா படைகள், தலைநகர் கீவ்வை நான்கு திசைகளில் இருந்து தாக்கி வருவதால், அந்த நகரின் பல இடங்கள் பற்றி எரிகின்றன.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஆவேச தாக்குதலை தொடுத்துள்ளது. அந்நாட்டின் கார்கிவ் நகரை கைப்பற்றி உள்ள ரஷ்யா படைகள், தலைநகர் கீவ்வை நான்கு திசைகளில் இருந்து தாக்கி வருவதால், அந்த நகரின் பல இடங்கள் பற்றி எரிகின்றன.

உக்ரைன் நாடு மீது கடந்த 24-ந்தேதி போர் தொடுத்த ரஷியா, முதல் நாளில் ஏவுகணைகளை வீசியும், விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியும் தாக்கியது. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

2-வது நாளில் தலைநகர் கீவ்வை நோக்கி ரஷிய வீரர்கள் முன்னேறினர். அந்த நகரை சுற்றிவளைக்க ராணுவ பீரங்கிகள் மூலம் முன்னேறி சென்றனர். குறிப்பாக பெலாரஸ் நாட்டின் எல்லையில் இருந்து உக்ரைனுக்குள் ரஷிய படை புகுந்தது. அதே போல் மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டன.

நேற்று 3-வது நாளில் ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்தது. ரஷிய ராணுவத்தின் பிரதான படைப்பிரிவு கீவ் நகருக்குள் செல்ல வழி ஏற்படுத்தும் வகையில் சிறிய படைக்குழு அந்நகருக்குள் நுழைய முயற்சித்ததாகவும், அதை தாங்கள் முறியடித்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் கீவ்வில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள வானிஸ் கீவ் நகரத்தில் ஒரு விமான தளத்தை கைப்பற்றும் முயற்சியில் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் கீவ் நகரில் உள்ள அணையை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கீவ்வுக்குள் புகுந்துள்ள ரஷிய ராணுவ வீரர்களுடன் உக்ரைன் வீரர்கள் தெருக்களில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அங்குள்ள குடியிருப்புகள் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் இன்று 4-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். இந்தநிலையில் உக்ரைன் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷிய ராணுவத்தினருக்கு அதிபர் புதின் திடீரென்று நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனின் அனைத்து நகரங்களுக்குள்ளும் நுழையும் வகையில் எல்லா திசைகளில் இருந்தும் ராணுவத்தை விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டதை அடுத்து நள்ளிரவு ரஷிய ராணுவத்தின் தாக்குதல் பல மடங்கு அதிகரித்தது. நான்கு திசைகளில் இருந்தும் ஏவுகணைகள் வீசப்பட்டன. ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரின் வாசில்கீவ் பகுதியில் உள்ள எண்ணை கிடங்கு வெடித்து சிதறியது. அந்த எண்ணை கிடங்கில் இருந்து தீப்பிழம்பு பல அடி உயரத்திற்கு எழும்பியது. எண்ணைக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நகர மேயர் நடாலியா பலசினோவிச் உறுதிபடுத்தி உள்ளார்.

இதேபோல் உக்ரைன் வடகிழக்கு நகரமான கார்கீவில் உள்ள எரிவாயு குழாய் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. ரஷியா தற்போது உக்ரைனில் எரிவாயு மற்றும் எண்ணை உள் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் தலைநகர் கீவ்உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள எண்ணெய் கிட்டங்கிகள் தீப்பற்றி எரிகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments