உக்ரைனில் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் மேலும் ஒரு விமானம் டெல்லி வந்தது

0 2875

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 219 பேரை மீட்டு முதல் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்து சேர்ந்த நிலையில் 250 பேருடன் இரண்டாவது விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது.

ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து உக்ரைன் அரசு தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள், அதிகாரிகள் மூலம் ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மத்திய அரசு இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆபரேசன் கங்கா என்று பெயரிட்டுள்ளது. முதல்கட்டமாக இந்தியர்கள் 219 பேருடன் புறப்பட்ட விமானம் நேற்றிரவு மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. உக்ரைனில் இருந்து வந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்று அவர்களிடம் அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

தங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர். உக்ரைனில் எஞ்சியிருக்கும் இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த நிலையில் 2வது கட்டமாக தமிழக மாணவர்கள் 5 பேர் உள்பட 250 இந்தியர்களுடன் மற்றொரு விமானம் ருமேனியாவின் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை டெல்லி வந்டைந்தது. தாயகம் திரும்பிய இந்தியர்களை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா வரவேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொடர்பில் இருப்பதாகவும், உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் இருந்து மேலும் ஒரு மீட்பு விமானம் இந்தியர்களை இன்று அழைத்து வர உள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களின் பெற்றோருடன் காணொலி வாயிலாக வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடினர். ஒவ்வொரு மாணவரும் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசுத் தரப்பில் பெற்றோருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹங்கேரியில் இருந்து 240 இந்தியர்களுடன் 3-வது விமானம் புறப்பட்டது. ஆபரேஷன் கங்கா மூலம் இரண்டு விமானங்களில் 469 பேர் மும்பை மற்றும் டெல்லி வந்தடைந்த நிலையில் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து 240 பேருடன் 3-வது விமானம் புறப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

உக்ரைனில் இருந்து ஹங்கேரி வழியாக மீட்கப்பட்ட  இந்தியர்கள் இருநூற்று நாற்பது பேருடன் 3வது விமானமான AI1940, டெல்லி  வந்தடைந்துள்ளது.  ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானத்தில்  தமிழக மாணவர்கள் பனிரெண்டு பேரும் வந்துள்ளனர். இன்று பிற்பகலில் அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments