ரஷ்ய அதிபருக்கு கண்டனம்.. உலக நாடுகளில் போராட்டம்..!
உக்ரைன் மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ரஷ்யா அரசுக்கு எதிராக சொந்த நாட்டு மக்களைப் போலவே பிற நாட்டினரும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ரஷ்யாவிலேயே எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக மாஸ்கோ, புனித பீட்டர்ஸ்பெர்க் உள்பட 51 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் இதுவரை 1,400 பேர் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில், ஏராளமானோர் உக்ரைன் தேசிய கொடியுடன் திரண்டு ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அந்நகரின் மையப்பகுதி நோக்கி பேரணியாகச் சென்றனர்.ஸ்பெயின் நாட்டினருடன், அங்கு வசிக்கும் உக்ரைனியர்களும் பேரணியில் பங்கேற்றனர்.
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில், ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கண்டன பேரணியில் 6,000 பேர் பங்கேற்றனர்.
தைவான் தலைநகரிலும், ரஷ்யா படையெடுப்பை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. தைவானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா தீவிரம் காட்டி வருவதால், உக்ரைன் விவகாரத்தில் உலக நாடுகளின் நடவடிக்கைகளை தைவான் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் கனமழையையும் பொருட்படுத்தாமல், ஏராளமானோர் பேரணி சென்றனர். ரஷ்யாவிற்கு உக்ரைன் தக்க பதிலடி தருமாறு அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ரஷ்ய அதிபர் புடினை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான ரஷ்யர்களும் பங்கேற்று போரை நிறுத்துமாறு தங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
Comments