கீவில் ஏவுகணைத் தாக்குதல்.. அடுக்குமாடிக் கட்டடம் சேதம்.. ஆற்றுப் பாலம் இடிந்தது..!
உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் அடுக்குமாடிக் கட்டடத்தின் ஐந்து தளங்கள் நொறுங்கிய காட்சிகளும், மற்றொரு தாக்குதலில் ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து நொறுங்கிக் கிடக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. தலைநகர் கீவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ரஷ்ய ராணுவம் ஏவிய ஏவுகணை தாக்கியுள்ளது. இதில் அந்தக் கட்டடத்தின் நடுவே துளை விழுந்து 5 தளங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
ஏவுகணை தாக்கிய கட்டடத்தின் உட்புறம் உள்ள கண்காணிப்புக் கேமராவிலும் அந்தத் தாக்குதல் காட்சி பதிவாகியுள்ளது.இன்று காலை 8:12 மணிக்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைக் காட்டும் மற்றொரு காட்சியும் வெளியாகியுள்ளது.
ஏவுகணை தாக்கியதும் குண்டுகள் வெடித்துச் சிதறியதில் 5 தளங்களின் ஒருபகுதி இடிந்ததுடன் சுற்றியுள்ள கட்டடங்களும் சேதமடைந்தன. இந்தத் தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காயமடைந்தவர்களை உடனடியாக மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தின் வெளியே தெருவிலும் இடிபாடுகளும் சிதைவுகளும் சிதறிக் கிடக்கின்றன. ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் இந்தக் கட்டடம் இடிந்ததாகக் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ஸ்ச்கோ தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வாழும் குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் திமித்ரோ குலேபா குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைனில் ஆற்றுப் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் அந்தப் பாலம் முற்றிலும் இடிந்து நொறுங்கிச் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
Comments