மூன்றாவது நாளாக உக்ரைன் தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் போர்!
மூன்றாவது நாளாக உக்ரைனை தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் போர் நடத்திவருகின்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லட்சத்துக்கும் மேற்பட்ட பெரும் படை உக்ரைனை வளைத்துள்ளது. ரஷ்ய வீரர்கள் உக்ரைனை மூன்று திசைகளிலும் சுற்றி வளைத்து தலைநகர் கீவ்வை கைப்பற்ற கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.மூன்றாவது நாளானஇன்றும் போர் நீடிக்கிறது. பல இடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன. வானில் இருந்து குண்டு மழை பொழிவதாகவும் தொடர்ந்து துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் வெடிப்பதாகவும் யுத்தக்களத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தலைநகருக்கு வெளியில் 5-50 கிலோமீட்டர் தூரத்தில் ராணுவத்தைத் தடுத்து நிறுத்தி உக்ரைன் வீரர்கள் உறுதியுடன் போரை எதிர்கொண்டுள்ளனர்.ஆயினும் மிகப்பெரிய ரஷ்யப் படை விரைவில் உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றக் கூடும் என்றும் கூறப்படுகிறது.ஆக்ரமிப்பாளர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அவர்களை அழிக்குமாறு பொதுமக்களுக்கு உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் 1000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கீவ் அருகில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் விமான நிலையத்தை ரஷ்யப் படை கைப்பற்றியது.இதில் நடைபெற்ற சண்டையில் 200 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்த சண்டையில் 25 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும் பலநூறு பேர் காயம் அடைந்திருப்பதாகவும் ஐநா.சபை அறிவித்துள்ளது.
போர் உக்கிரம் அடைந்த நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக புலம் பெயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் பாம்பு தீவில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த ரஷிய போர் கப்பல் ஒன்று உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு கூறியது. ரஷிய போர் கப்பலின் கேப்டன் தீவில் உள்ள உக்ரைன் வீரர்களிடம் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு கூறினார். இதற்கு மறுத்ததால் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments