உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி

0 2067

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. 

உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும், உடனடியாக படைகளை திரும்பப் பெறவும் அமெரிக்கா, அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தன.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுவதற்கு முன் நிரந்தர உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளிடையே அதிபர் புதின் காணொலியில் உரையாற்றினார்.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக கைவிட வேண்டும் என்றும் நிபந்தனைகளின்றி உக்ரைனில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்குகெடுப்பில் பங்கேற்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளில் ஒன்றான ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

தீர்மானத்தின் மீது பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைனில் நிலவும் சூழல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக தெரிவித்தார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவும், மீண்டும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தினார்.

வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்துவதாகவும், மனித உயிர்களை விலையாகக் கொடுத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்றும் திருமூர்த்தி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments