குடியிருப்புகள் மீது தாக்குதல்.. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு..!
கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்யப் படையினர் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் வாலோடிமிர் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கில் ரஷ்யாவிலும், பெலாரசிலும் இருந்து உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்யப் படையினர் நேற்றே செர்னோபில் அணுவுலையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
இன்று தலைநகர் கீவின் வடகிழக்கிலும், கிழக்கிலும் இருந்து ரஷ்யப் படையினர் தாக்குவதாகவும், அவர்களை எதிர்கொண்டு உக்ரைன் வீரர்கள் போரிடுவதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யப் படையினர் தாக்குவதாகவும், கீவில் ஆங்காங்கே குண்டுவெடிக்கும் ஓசை கேட்பதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் 2 ஏவுகணைகளையும், ஒரு விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செர்னோபில் அணுவுலையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்துள்ளதாக அணுவாற்றல் முகமை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக நிதியமைப்புக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக பிரான்ஸ் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத் தடை விதித்த பிரிட்டனுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக பிரிட்டிஷ் விமான நிறுவனங்களின் விமானங்கள் தங்கள் விமான நிலையங்களில் இறங்கவும், தங்கள் வான்பரப்பின் ஊடாகச் செல்லவும் ரஷ்யா தடை விதித்துள்ளது.
Comments