இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்.. ஹங்கேரி, ருமேனியா வழியே மீட்க திட்டம்..!

0 2043
இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்.. ஹங்கேரி, ருமேனியா வழியே மீட்க திட்டம்..!

ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையில், ருமேனியா, ஹங்கேரி வழியாக பத்திரமாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், அங்குள்ள பல்லாயிரக்கணக்காக இந்தியர்கள் விமானப் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள தடை காரணமாக வெளியேற வழியின்றி பாதுகாப்பான இடங்களில் பதுங்கி உள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அதன் அண்டை நாடுகளான ஸ்லோவாக்கியா, ருமேனியா, ஹங்கேரி, போலாந்து நாடுகளின் வழியாக மீட்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக உதவி கோரி, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மேலும், உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள், தங்கள் நாடுகளின் வழியே இந்தியா திரும்ப அந்நாடுகள் தரப்பில் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ருமேனியா வழியாக இந்தியர்களை மீட்கும் வகையில் அந்நாட்டிற்கு இரு விமானங்களை இந்தியா அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மும்பை மற்றும் டெல்லியில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள், ருமேனியா வரும் 500 இந்தியர்களை முதற்கட்டமாக மீட்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியர்களை சாலை மார்க்கமாக ருமேனியா எல்லைப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவர்களை டெல்லி அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேபோல், உக்ரைனின் மற்றொரு அண்டை நாடான ஹங்கேரி வழியாகவும் இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளின் எல்லை அருகே உள்ள மாணவர்கள் வெளியுறவுத்துறை குழுவுடன் ஒருங்கிணைந்து புறப்பட இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments