தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுமா ரஷ்யா.. 2-வது நாளாக தொடரும் தாக்குதல்.. உக்ரைன் மக்களின் நிலை என்ன?

0 1835
தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுமா ரஷ்யா.. 2-வது நாளாக தொடரும் தாக்குதல்.. உக்ரைன் மக்களின் நிலை என்ன?

உக்ரைன் மீதான தாக்குதலை 2-வது நாளாக ரஷ்யா தொடர்ந்து வரும் சூழலில், போர் தொடங்கியது முதலே உக்ரைனில் உள்ள மக்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்கும் ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.

தலைநகர் கியவ்-வை கைப்பற்ற ரஷ்யா மிகுந்த முனைப்பு காட்டி வரும் சூழலில் அத்தியாவசிய பணிக்காக செல்வோரை தவிர மற்ற அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மேயர் விட்டலி கிளிட்ஸ்கோ கேட்டுக்கொண்டுள்ளார்.அதேசமயம் எச்சரிக்கை செய்யப்படும் போது வெளியேற வசதியாக மருந்துகள், ஆவணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, 2-வது பெரிய நகரான கார்க்கிவ்-ல் Mikhail Shcherbakov என்ற குடியிருப்பாளரின் பல அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பரப்பை ஏவுகணையின் சிறு சிறு துண்டு தாக்கியுள்ளது. பீரங்கியின் சத்தம் கேட்டு எழுந்து, தனது தாயை எழுப்பச்சென்ற போது தனக்கு பின்புறத்தில் மீண்டும் ஒருமுறை வெடிச்சத்தம் கேட்டதாக அவர் கூறினார்.

போர் தொடங்கிய விடியற்காலையிலேயே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெடிகுண்டுகள் வெடிப்பால் புகை மண்டலம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் பலரும் வெடிகுண்டு தாக்குதலுக்கு அஞ்சி டிரைஃப்ரூட்ஸ், நட்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக பலரும் மெட்ரோ சுரங்கங்களுக்குள் தஞ்சம் அடைந்தனர்.

கார்க்கிவ் நகரில் உள்ள சார்ஷா என்ற பெண், தூக்கத்தில் இருந்த தான் வெடிச்சத்தம் கேட்டு பால்கனிக்கு சென்று பார்த்ததாகவும் துரதிர்ஷ்டவசமாக அது பட்டாசின் சத்தம் இல்லை எனவும் இது தன் வாழ்நாளில் மோசமான சூரிய உதயம் எனவும் கூறினார்.

பெட்ரோல் பங்குகளில் கார்கள் எரிபொருள் தேவைக்காக வரிசைகட்டி நின்றன. பலரும் தங்களது உடைமைகளுடன் மெட்ரோ சுரங்கப்பாதைகளில் சென்று தஞ்சம் அடைந்ததுடன், பலரும் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும் நோக்கில் அலைந்து கொண்டிருந்தனர்.

ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்ததற்கு மத்தியிலும், எரிச்சலுடன் சிலர் தங்களது அன்றாட பணிகளை தொடர்ந்தனர். சிலர் தங்களது செல்லப்பிராணி நாயுடன் வாக்கிங் செல்வதும், நண்பர்களை நலம் விசாரிப்பதுமாக இருந்தனர். பலரும் அச்சத்துடன் தங்கள் மொபைல் ஃபோன்களை பதற்றத்துடன் அடிக்கடி எடுத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்த போர் நடைபெறும் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என சிலர் கூறினர். தலைநகர் கியவ்வில் வெடித்த வெடிகுண்டுகளை ராணுவ வீரர்களும், போலீசாரும் அகற்றிக்கொண்டிருந்த காட்சிகளை சிலர் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

உக்ரைன் முழுவதும் எச்சரிக்கைகள் ஒலிக்க ஒலிக்க பலரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்க குவிந்தனர். கார்க்கிவ்-வில் குழந்தைகள் விளையாடும் மைதானங்களில் வெடி குண்டுகளின் துண்டுகள் சிதறிக்கிடந்ததை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரவு நேரத்தில் மெட்ரோ சுரங்கப்பாதைகள் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிந்தது. பலரும் புதிர்விளையாட்டு, அரட்டையடிப்பது, விளையாடுவது, இரவு உணவு சாப்பிடுவது என பொழுதை போக்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு பெண்மணி, எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த போதும் தான் வழக்கமாக பணிக்கு சென்றதாகவும், வழக்கத்திற்கு மாறாக இருந்த ஒன்றே ஒன்று டாக்ஸி கிடைக்காதது தான் எனவும் கூறினார். மரியுபோலில் வசிக்கும் குடியிருப்புவாசி ஒருவர் பகல் முழுதும் சுற்றித்திரிந்தும் தனக்கு பணமோ ஒற்றை எரிவாயு சிலிண்டரோ கிடைக்கவில்லை என புலம்பினார்.

போர் தொடங்கப்போகிறது என்பதை யாரும் நம்பியிருக்கமாட்டார்கள் அதிலும் குறிப்பாக ரஷ்ய படைகள் நேரடியாக தலைநகர் கியவ்-ஐயே தாக்கும் என எதிர்ர்பார்த்திருக்கமாட்டார்கள் என சோவியத் மெட்ரோவில் தங்கியிருந்த ஒருவர் கூறினார்.

இதனிடையே மக்கள் அச்சமடைந்தால், அவர்களது நிலைத்தன்மை குலைந்தால் அது ஏற்கனவே ராணுவ பலம் மிக்க ரஷ்யாவுக்கு மேலும் பலத்தை கொடுத்துவிடும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனால் ஆர்வமுடைய மக்கள் அனைவரும் துப்பாக்கிகளுடன் ராணுவத்தில் சேரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த சூழலில் மேற்கு நகரான லுவ்யூவ் -ல் துப்பாக்கி விற்பனை கடைகளுக்கு சென்று பலரும் உக்ரைன் ராணுவத்தில் சேரும் நோக்கில் துப்பாக்கிகளை வாங்க வரிசை கட்டி நின்றனர். இது எங்கள் நாடு.. இதற்காக இறுதி வரை நாங்கள் சண்டையிடுவோம் என அவர்களில் யூரி என்பவர் தேசப்பற்றுடன் கூறினார். நாங்கள் தற்காப்புக்காக துப்பாக்கி வாங்குகிறோம், தாக்குதலுக்காக அல்ல என மற்றொருவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments