உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பு: முதல் நாளில் 137 பேர் உயிரிழப்பு

0 1715

ரஷ்யாவின் படையெடுப்பால் முதல் நாள் போரில் ராணுவ அதிகாரிகள் 10 பேர் உட்பட மொத்தம் 137 பேர் உயிரிழந்ததாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வாலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

மேலைநாடுகள் எச்சரித்த போதிலும் உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சிலான படையெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி வீடியோவில் பேசிய உக்ரைன் அதிபர் வாலோடிமிர் செலன்ஸ்கி, தன்னை முதல் இலக்காகவும், தன் குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் எதிரி குறித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவரை அழிப்பதன்மூலம் உக்ரைனை அழிக்க எதிரிகள் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தான் தலைநகரிலேயே இருக்கப் போவதாகவும், தன் குடும்பத்தினரும் உக்ரைனிலேயே இருப்பர் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ரஷ்யா தீய வழியில் செல்வதாகவும், உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும், ஒருபோதும் தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காது என்றும் தெரிவித்தார். முதல் நாளில் ராணுவ அதிகாரிகள் 10 பேர் உட்பட 137பேர் உயிரிழந்ததாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.

 உக்ரைனில் உள்ள 16 ஆயிரம் இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர இந்தியா முயல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து ரஷ்ய அதிபரிடம் நேற்றிரவு தொலைபேசியில் பேசியுள்ளார். சாலை வழியாக இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

 ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் போரை நிறுத்தப் போதுமானதாக இருக்காது என்பதை அதிபர் ஜோ பைடனும் ஒப்புக்கொண்டுள்ளார். போரைத் தேர்ந்தெடுத்த புடினும் ரஷ்யாவும் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என பைடன் தெரிவித்துள்ளார். இந்தத் தடைகளால் டாலர், யூரோ, பவுண்ட், என் ஆகிய நாணயங்களில் ரஷ்யா வணிகம் செய்ய முடியாது. ரஷ்யாவின் மிகப்பெரிய ஐந்து வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 முதல் நாள் போரில் உக்ரைனின் அரசு மற்றும் ராணுவக் கட்டமைப்புகளைத் தாக்கியதுடன், விமானப் போக்குவரத்தையும் ரஷ்யா முடக்கிவிட்டது. செர்னோபில் அணுவுலையையும் ரஷ்யா கைப்பற்றிக் கொண்டது.

 உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்ததால் உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் முதல் கோதுமை வரை அனைத்துப் பொருட்களின் மொத்த விலைகளும் உயர்ந்துள்ளன.

 உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு கொடிய போர் நடவடிக்கை என்றும், ஐரோப்பாவின் அமைதியை ரஷ்யா குலைத்துள்ளதாகவும் நேட்டோ பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த நடவடிக்கையில் யாரேனும் குறுக்கிட்டால் வரலாற்றில் இதுவரை பார்த்திராத விளைவுகள் ஏற்படும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.

 பிரிட்டனின் நிதிச் சந்தையில் ரஷ்யா வணிகம் செய்வதை முடக்கப் பிரதமர் போரிஸ் ஜான்சன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி ரஷ்ய வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments