லாக்கருடன் பணம், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் ; சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞர்களை கைது செய்த போலீசார்
தெலங்கானாவில் தனியார் நிதி நிறுவனத்தில் லாக்கரை உடைக்க முயன்ற கொள்ளையர்கள், அது முடியாததால் 14 லட்சம் பணம், 20 சவரன் நகைகளோடு லாக்கரையும் சேர்த்து தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரீம் நகரில் இயங்கி வரும் இந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 21ம் தேதி வழக்கம் போல அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், மறுநாள் காலை வந்து பார்க்கையில் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் திருடப்பட்டதாக போலீசில் புகாரளித்தனர்.
சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, மாஸ்க் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவன் லாக்கரை உடைக்க முயன்றதும் அது முடியாமல் லாக்கரோடு தூக்கிச் சென்றதும் தெரியவந்தது.
கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து, கரீம் நகர் பேருந்து நிலையம் அருகே இருந்த காஷ்மீரைச் சேர்ந்த ஷேக் சாதிக், முகமது ஷபாத் ஆகிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லாக்கர் பணம், நகைகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments