உக்ரைன் மீது ரஷ்யா போர் ; தங்களை விரைந்து மீட்குமாறு தமிழக மாணவர்கள் கோரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், தங்களை விரைந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சென்று உக்ரைன் தலைநகர் கிவ்-வில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள், பீரங்கிகள், போர் விமானங்களின் சத்தத்தை கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
ரயில், விமானப் போக்குவரத்து சேவை முடங்கியதால், சாலை வழி போக்குவரத்து மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் நிலையில், மிக சில வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது எனவும், அதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாகவும், தாக்குதல் சம்பவம் முடிவுற்று, நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தால் மட்டுமே விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
மேலும்,தற்போதைய நிலையில், விடுதிகளிலேயே தங்கி பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் கூறியுள்ளதாகவும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் காத்திருப்பதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை மீட்க மத்திய, மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைனில் மாலையில் பதற்றம் சற்று தணிந்துள்ளதாக விவரிக்கும் தமிழக மருத்துவ மாணவி ஒருவர் பெற்றோர் பதற்றப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
வீடுகளில் உள்ள பதுங்கு குழிகளுக்குள் தங்கி தங்களை பாதுகாத்துக் கொள்வதாக விவரித்துள்ள அவர், இந்திய அரசு தங்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, இந்திய அரசு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொட்டும் பனியில் நின்றவாறு வீடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார். வின்சியா என்ற அந்த மாணவி, கடுமையான குளிரில் சுரங்கங்கள், பதுங்குக் குழிகள் உள்ளிட்டவற்றில் தாங்கள் தஞ்சம் அடைந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் இருந்து முன்கூட்டியே பாதுகாப்பாக ஊர் திரும்பிய விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர், தன் சக நண்பர்களை மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
விஷ்வா என்ற அந்த மாணவர், இரு தினங்களுக்கு முன்பே சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். போர் வரும் என ஜனவரி மாதமே தகவல்கள் வெளியானதாகவும் அந்த நேரம் விமான டிக்கட் 2 மடங்காக உயர்ந்ததால், பல மாணவர்களால் அங்கிருந்து வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
உக்ரைனில் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். வந்தவாசியைச் சேர்ந்த செல்வ மணிகண்டன் என்ற அந்த மாணவர், உக்ரைனில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
செல்வமணிகண்டனுடன் உக்ரைனில் மருத்துவம் பயின்று வரும் பாலாஜி என்ற மாணவர், அங்கு ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கழிப்பதாகவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்திய அரசு தங்களை மீட்டுச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் - பிரதமர் மோடி இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின்பு தங்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியக் கொடியை ஏந்தியபடி எல்லைப் பகுதிக்குப் பயணப்படுமாறு தாங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தைச் சேர்ந்த முகம்மது அதீம் என்ற அந்த மாணவர், தென் உக்ரைனில் 4ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உக்ரைன் அரசும் தங்களுக்குப் பல்வேறு வகைகளில் உதவிகள் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
Comments