படைபலமிக்க ரஷ்யாவை உக்ரைன் எதிர்கொள்வது மிகக் கடுமையான சவால் ; வல்லுநர்கள் கருத்து
படைபலமிக்க ரஷ்யாவை உக்ரைன் எதிர்கொள்வது மிகக் கடுமையான சவாலாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய ராணுவத்தில் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேரும், அதன் ஆயுதப் படைகளில் 9 இலட்சம் வீரர்களும் உள்ளனர். ரஷ்யாவிடம் 2840 பீரங்கிகள் உள்ளன. இது உக்ரைனில் உள்ளதைப் போல் மூன்று மடங்காகும்.
எனினும் அவர்கள் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும், உயிரிழப்பும் நேரக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு போரின்றியே கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றிக் கொண்டது. அதன்பின்னர் நாட்டின் மற்ற பகுதிகளைக் காக்கும் வகையில் உக்ரைன் ராணுவமும் வீரர்களுக்குச் சிறப்பாகப் பயிற்சி அளித்ததுடன் ஆயுதங்களையும் வழங்கியுள்ளது.
உக்ரைன் படையில் 3 இலட்சத்து 61ஆயிரம் வீரர்கள் உள்ளனர். வீரர்கள் மற்றும் போர்த்தளவாடங்களின் எண்ணிக்கையில் உக்ரைனின் வலு குறைவாகவே உள்ளது. உக்ரைன் 2010இல் தொடங்கிப் பத்தாண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மும்மடங்காக அதிகரித்துள்ளது.
விமான எதிர்ப்பு, ஏவுகணை எதிர்ப்பு ஆகியவற்றிலும் உக்ரைன் வலுவின்றி உள்ளதால் அது ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்னணுத் தொழில்நுட்பத்தில் உயரிடத்தில் உள்ள ரஷ்யா, படை நிர்வாகம், கட்டுப்பாடு குறித்த தகவல்தொடர்பையும் துண்டித்து எதிரியை நிலைகுலையச் செய்யும் உத்தியையும் பயன்படுத்தக் கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments