விவாகரத்து தர மறுத்த மனைவியையும், பெற்ற மகளையும் கத்தியால் குத்தி தாக்கிய தலைமை காவலர் போலீசில் சரண்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், விவாகரத்து தர மறுத்த மனைவியையும், பெற்ற மகளையும் கத்தியால் குத்தி தாக்கிய தலைமை காவலர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.
மீஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் SCP எனப்படும் சென்னை செக்யூரிட்டி போலீஸ்-சில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு 2005 ஆண்டு பூர்ணிமா என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்த ராஜேந்திரன், நோட்டீஸ் வழங்கிய நிலையில், அதில், பூர்ணிமா கையெழுத்திட மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் இடது கை மற்றும் வயிற்றில் குத்திய ராஜேந்திரன், தடுக்க வந்த மகள் பத்மினியும் குத்திவிட்டு தப்பிச்சென்றார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments