கப்பல் போக்குவரத்து நிறுத்தம்.. தரைப்படையினர் படையெடுப்பு..!
அசோவ் கடலில் உக்ரைனுக்கான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா, பெலாரஸ் எல்லைகளில் இருந்து ரஷ்யத் தரைப்படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய எல்லையை ஒட்டிய கார்க்கிவ் மாநிலத்தில் உள்ள சுகுயேவ் விமானப்படைத் தளத்தின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளித்தது.
வடக்கே பெலாரசில் இருந்தும், வடக்கிலும் கிழக்கிலும் ரஷ்யாவில் இருந்தும் எனப் பலமுனைகளிலும் ரஷ்யத் தரைப்படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மோதலில் உக்ரைன் படையினர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் உக்ரைனுக்குத் தெற்கே உள்ள அசோவ் கடல் வழியாக அந்நாட்டின் மரியுபோல் துறைமுகத்துக்குக் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்திவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பால் மாஸ்கோ பங்குச்சந்தையில் பங்குவிலைக் குறியீடு 14 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இதையடுத்துப் பங்குச்சந்தையில் வணிகம் நிறுத்தப்பட்டது. உடனடியாக ரஷ்ய நடுவண் வங்கி தலையிட்ட பின் மீண்டும் பங்குச்சந்தையில் வணிகம் தொடங்கியுள்ளது.
அசோவ் கடற்கரையில் ரஷ்யாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள மரியுபோலில் விமானப்படைத் தளங்கள், ராணுவ முகாம்கள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தின. இதனால் விமான நிலையத்தையொட்டி உள்ள பகுதி புகைமூட்டமாகக் காட்சியளித்தது. ரஷ்ய பீரங்கிப் படைகள் எல்லையைத் தாண்டி மரியுபோல் நகருக்குள் நுழைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் போர்க்கப்பல்களில் இருந்து உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எரிந்து விழுந்த ஒரு ஏவுகணையின் சிதைவுகளை உக்ரைன் காவல்துறையினர் பார்வையிட்டனர்.
கிழக்கு உக்ரைனில் லுகான்ஸ்க் மண்டலத்தில் உள்ள நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments