உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. உலக நாடுகள் கருத்து..!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தோடு, இது நியாயமற்ற தாக்குதல் என விமர்சித்தார். மேலும், புதினின் அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு ஜோ பைடனிடம் உக்ரைன் அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், நாளை ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜோ பைடன், உக்ரைன் - ரஷ்யா விவகாரம் குறித்து விவாதிக்கிறார். ரஷ்யா மீது அமெரிக்காவும், தமது நட்பு நாடுகளும் கடுமையான பொருளாதார தடையை விதிக்கவுள்ளதாகவும், உக்ரைனுக்கும், உக்ரைன் மக்களுக்கும் எப்போதும் ஆதரவையும், உதவியையும் அளிப்போம் எனவும் ஜோ பைடன் உறுதியளித்துளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான விவகாரத்தில் உக்ரைன் பக்கம் தான் நிற்போம் என உறுதியளித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நட்பு நாடுகளும், நேட்டா நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்போம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் ஆரம்பம் முதலே உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் ஜெர்மனி, தற்போது உக்ரைனுக்கு என்றும் ஜெர்மனி உதவியாக இருக்கும் என அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பெர்லின் நகரில் உக்ரைன் கொடி வர்ணத்தை ஜெர்மனி ஒளிரச் செய்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் மிகப்பெரிய சிக்கல் உருவாகும் எனக் கூறியுள்ள இந்தியா, போர் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாகவும், ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, இரு நாடுகளும் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ரஷ்யா,எந்தவித பக்கசார்பும் இன்றி கருத்து தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. உக்ரைன் மீதான போர் பதற்றத்தால் ரஷ்யா - இந்தியா இடையேயான உறவு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது, குஜராத்தில் நடக்கும் இந்திய பாதுகாப்பு கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்கும் எனவும் ஐ.நா.வில் பேசிய ரஷ்ய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
Comments