பள்ளி குழந்தைகளுக்குக் கொடுக்கும் சத்துணவில் விஷம் வைத்துவிடுவேன் ; மிரட்டல் விடுத்த பெண் சமையலர் மீது வழக்குப்பதிவு

0 3309
பள்ளி வளாகத்தில் மது அருந்திய மகன் மீது மக்கள் புகாரளித்ததால் ஆத்திரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி குழந்தைகளுக்குக் கொடுக்கும் சத்துணவில் விஷம் வைத்துவிடுவேன் என மிரட்டிய அரசுப் பள்ளி பெண் சமையலர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழக்காரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து போலீசில் புகாரளித்ததில் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மது அருந்திய இளைஞர்களில் கோபி என்பவன், அப்பள்ளியில் சமையலராகப் பணியாற்றும் கொழிஞ்சி என்ற பெண்ணின் மகன் என்ற நிலையில், போலீஸ் நடவடிக்கையால் ஊர்மக்கள் மீது அவர்கள் கோபத்தில் இருந்துள்ளனர்.

கொழிஞ்சி, கோபி, அவனது தந்தை முத்து உட்பட 5 பேர் ஒன்று சேர்ந்து, புகார் கொடுத்த மக்களை மிரட்டியுள்ளனர். கொழிஞ்சி ஒரு படி மேலே போய், பள்ளியில் சமையல் செய்யும்போது உங்கள் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துவிடுவேன் என மிரட்டினார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட சத்துணவு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments