தாயை எதிர்த்து போட்டியிட்ட மகள், ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி ; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்கள்

0 1838

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தாயை எதிர்த்து போட்டியிட்ட மகள் வெற்றி வாகை சூடியது, ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறின. அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு...

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 9ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் அருண் சுந்தரபிரபு, வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 15 வாக்குகள் அதிகம் பெற்ற அவர், வெற்றிபெற்ற சில மணி நேரத்திலேயே, அமைச்சர் மூர்த்தியை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார்.

 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 160ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிருந்தாஸ்ரீ முரளி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறும் போது, தனது தந்தையை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர்விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைப்பார்த்த அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தாயும், மகனும் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். சிபிஎம் சார்பில் போட்டியிட்ட தாயும், மகனும் வெற்றி பெற்ற நிலையில், உறவினர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

மதுரை மாவட்டம் ஹிஜாப் சர்ச்சை எழுந்த மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். வாக்குப்பதிவு அன்று ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்களிடம் பா.ஜ.க. முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,
அந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெறும் 10 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

 திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் வேட்புமனுதாக்கலின் போது விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டு வீல் சேரில் அமர்ந்து பிரச்சாரம் செய்த திமுக பெண் வேட்பாளர் காஞ்சனா 18ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற நிலையில், வீல் சேரில் வந்தே வெற்றிச் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார். சான்றிதழை பெற்றுக் கொண்ட காஞ்சனாவுக்கு திமுகவினரும் சக வேட்பாளர்களும் பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் மண்டலத்தில் 107ஆவது வார்டில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளரான கிரண் ஷர்மிளி வெற்றியை தன்வசமாக்கினார். வெற்றி சான்றிதழை கிரண் ஷர்மிளி பெற்றவுடன் அவரது கணவர் மகிழ்ச்சியில் ஆனந்தகண்ணீர் விட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவரான புவனேஷ்வரி வெற்றி வாகை சூடினார். 25 வயது இளம் வேட்பாளரான அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை தோல்வியடையச் செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பேரூராட்சியில் ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிர் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட நிலையில், மகள் வெற்றி பெற்றார். 18 வது வார்டில் தாய் கோட்டீஸ்வரி திமுக சார்பிலும், அதிமுக சார்பில் அவரது மகள் பிரியாவும் களம் கண்டனர். இதில் அதிமுக வேட்பாளரான பிரியா வெற்றி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments