கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு இன்றைக்கான தேவையாகும் - பிரதமர்

0 1486

நாட்டில் உள்ள கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு வசதி என்பது இலக்கு அல்ல அது இன்றைக்கான தேவை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, திறமையான இளைஞர்களை உருவாக்குவதே அரசின் லட்சியம் என்று தெரிவித்துள்ளார்

இந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை, ஊரக வளர்ச்சித்துறையில் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான விளைவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அதில் உரையாற்றிய அவர், ஊரகப்பகுதிகளில் இணையதள வசதி வழங்கப்படுவதன் மூலம் அங்குள்ள இளைஞர்களின் திறன் அதிகரித்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அதுவே மத்திய அரசின் லட்சியம் என்றும் தெரிவித்தார். வளரும் கிராமங்களுக்கு, வீடுகள் மற்றும் அதன் நிலங்களின் சரியான எல்லை நிர்ணயிப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

அதற்காக அப்பகுதி நிலங்களை நவீன தொழில்நுட்பத்துடன் அளவிட்டு அதற்கான ஆவணங்களையும், சொத்து அட்டையையும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கும் ஸ்வமித்மா திட்டம் மூலம் 40 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 4 கோடி குடிநீர் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்திட்டத்திற்காக அமைக்கப்படும் குழாய்கள், குடிநீரை விநியோகிப்பது உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அனைத்து கிராமங்களுக்கும் கழிவறை, மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு என பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், மேலும் அது போன்ற திட்டங்கள் கொண்டு வர பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments