21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது தி.மு.க...!
தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளே கைப்பற்றி உள்ளன.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை தொடங்கி பல மணி நேரமாக நடைபெற்றது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து திமுக கூட்டணியே முன்னிலையில் இருந்தது.
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதே போல 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் 64 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது.100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. 65 வார்டுகளை கொண்ட திருச்சி மாநகராட்சியில் 59 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி கண்டுள்ளது.
60 வார்டுகளை கொண்ட சேலம் மாநகராட்சியில் 43 வார்டுகளுக்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 55 வார்டுகளை கொண்ட திருநெல்வேலியில் திமுகவுக்கு 47 வார்டுகள் கிடைத்துள்ளன.
60 வார்டுகளை கொண்ட திருப்பூரில் 30 க்கும் மேற்பட்ட இடங்களையும், 60 வார்டுகளை கொண்ட ஈரோட்டில் 48 வார்டுகளிலும், தூத்துக்குடியில் 50 வார்டுகளிலும், வேலூரில் 40 க்கும் மேற்பட்ட வார்டுகளிலும், தஞ்சாவூரில் 39 வார்டுகளிலும், திண்டுக்கலில் 37 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம்,கரூர், கும்பகோணம், கடலூர், சிவகாசி ஆகிய 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது.
Comments