தேர்தலில் வென்றதால் பா.ம.க பெண் கவுன்சிலர் கடத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பேரூராட்சி தேர்தலில் வென்ற பா.ம.க கவுன்சிலரை சிலர் போலீசார் முன்னிலையில் பகிரங்கமாக காரில் கடத்திச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட 18-வார்டுகளில் திமுக கூட்டணி 9 இடங்களையும் , அதிமுக கூட்டணி எட்டு இடங்களையும் கைப்பற்றிய நிலையில் ஒரு இடத்தை பாட்டாளி மக்கள் கட்சி வென்றது.
பேரூராட்சி தலைவரை தேர்தெடுக்க வேண்டுமானால் மெஜாரிட்டிக்கு 10 இடங்கள் தேவை என்ற நிலையில் 18வது வார்டு பாமக பெண் வேட்பாளர் அருள் ஜோதி, வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்ததும் மர்ம கும்பல் ஒன்று அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அம்பாசிட்டர் காரில் ஏற்றி கடத்திச்சென்றது
பட்டப்பகலில் போலீசார் முன்னிலையில் நடந்த இந்த கடத்தல் சம்மபவத்தை தடுக்க எவரும் முன்வராத நிலையில் தகவல் அறிந்து திரண்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்கள் கட்சியின் கவுன்சிலரை திமுகவினர் கடத்திச்சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்ததோடு அங்கிருந்த திமுகவினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அதே போல தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி கவுன்சிலர்களை தன்வசபடுத்துவதில், திமுகவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கில், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தயார் நிலையில் இருந்த திமுகவை சேர்ந்த இரு பிரிவினர், வெற்றியுடன் வெளியே வந்த தங்கள் கட்சியின் கவுன்சிலர்களையும், கூட்டணிகட்சியின் கவுன்சிலர்களையும், தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதால் கைகலப்பு உருவானது
இரு தரப்பினருக்குள்ளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் திமுகவினரை கலைந்து போக கேட்டுக் கொண்டனர்.அதனையும் மீறி தங்களுக்கு ஆதரவான கவுன்சிலர்களை காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றனர்.
தலைவர் பதவியை பிடிப்பதற்காக அவர்கள் சினிமா பாணியில் அடித்துக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments