நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை..!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 268 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஓட்டு எண்ணும் மையங்களில், பணி நடைபெறும் அறைகளில் 8 மேஜைகள் முதல் 14 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து மேஜைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் அதிகபட்சமாக 3 சுற்றுகள் மட்டுமே ஓட்டுகள் எண்ணப்படுமென தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பெரும்பாலான வார்டுகளின் தேர்தல் முடிவுகள் 2 சுற்றுகளிலே தெரிய வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வார்டு வாரியாக முடிவுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் முதல் சுற்றின் முடிவு காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரு மேஜைக்கு ஒரு முகவர் வீதம் அனுமதி அளிக்கப்படும் என்றும், ஒரு வார்டில் 15 வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் 15 முகவர்கள் ஒரு மேஜையில் இடம்பெறுவார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதுதவிர தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி மேஜையில் வேட்பாளரோ அல்லது அவரது சார்பில் ஒரு முகவரோ இடம் பெறலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்வதற்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஓட்டு எண்ணும் மையங்களில் முகவர்கள் செல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments