அரசுதுறைகளுக்கு இனி மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த டெல்லி அரசு முடிவு : காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக, பழைய அரசு வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க மாநில அரசு தீவிரம் காட்டுகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி, டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, டெல்லி அரசின் பல்வேறு துறைகள், தன்னாட்சி அமைப்புகளில் உள்ள பழைய பெட்ரோல், டீசல் வாகனங்கள் மாற்றப்பட்டு அதற்கு பதில் மின் வாகனங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பயன்படுத்த 12 மின் வாகனங்களை டெல்லியின் பொது நிர்வாகத் துறை அண்மையில் வாங்கியது.
டெல்லி அரசின் மின் வாகனக் கொள்கையின் கீழ் 2,000 பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதில், மின் வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments