உத்தவ் தாக்கரேவுடன், தெலங்கானா முதலமைச்சர் சந்திப்பு : நடிகர் பிரகாஷ்ராஜும் சந்திப்பில் பங்கேற்பு
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மும்பையில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது, மத்திய அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகிய முகமைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக சந்திரசேகர ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும், நாட்டின் கட்டமைப்பிலும் கொள்கையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்தும் பேசியதாகத் தெரிவித்தார்.
இரு மாநிலங்களும் ஆயிரம் கிலோமீட்டர் பொது எல்லையைக் கொண்டுள்ளதாகவும், மகாராஷ்டிர அரசின் உதவியுடன் காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்றிலிருந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும், தங்கள் அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்துப் பின்னர் பேசப்படும் எனவும் தெரிவித்தார்.
அப்போது சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர். அதன்பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் அவரது இல்லத்தில் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.
Comments